பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/777

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

768

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"நாடி, எலும்பு , நரம்பு முதலிய உடலுறுப்புக்களுள் உயிராகிய யான் ஆர்? என்று என்னைத்தேடிப் பார்த்தும் என்னைத் தெளிய அறிந்து கொண்டேனல்லேன். இவ்வாறு தம்மைப் பற்றி ஆராயந்தறிகின்ற ஆராய்ச்சியறிவின் கண்ணே இதனைத் தெளிவிப்பதாகிய அறிவு வேறு உண்டு என்று ஆராய்ந்து நோக்கி, அவ்வாறு நாடுங்கால் விளங்கித் தோன்றும் இறைவனது திருவடி ஞானத்தால் அம்முதல்வனையும் உணர்ந்து அவனது பேரறிவினுள்ளே தாம் அடங்கி நின்று அங்ங்னம் அறியும் பொருளாகிய தம்மையும் உணரும் பயிற்சி பெறாதார், உயிராகிய தம்மை எங்ங்னம் அறியவல்லார்” என்பது இதன் பொருளாகும். இப்பாடல் சிவருபத்தால் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறுகூறிற்று என்பர் பெரியோர்.

தம்செயல் நீத்து இறைபணி நிற்பார்க்குப் பிராரத்த வினை (நுகர்வினை) உடலுழாய் நின்று வருத்தாது கழியும் என்றும், ஏனையோர்க்கு உயிருழாய்த் தொடர்ந்து வருத்தும் என்றும் கூறுவர் சான்றோர். தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தவர்களை இடர் நீக்கிக் காப்பாற்றுதல் தலைமைக் குணமுடையார்க்குரிய கடமையாதலால் தன்னைச் சார்ந்து தன் அடித்தொழில்புரியும் அடியார்க்குளவாம் வினைத் துன்பங்களை நீக்கியும் ஏனையோர்க்கு அருத்தியும் நிற்றலால் இறைவன் நடுவுநிலைமையில்லான்போலும் என ஐயுறுவாரை நோக்கி அங்ங்ணம் செய்தல் உலகியல் வழக்குக்குப் பொருந்தியதே என வற்புறுத்துவது,

“சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால்

நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்” (4-11-6)

எனவரும் திருநாவுக்கரசர் அருள்மொழிகளாகும். இதனை அடியொற்றியது,

"சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்

சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்ச்- சார்ந்தடியார் தாந்தானாச் செய்து பிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு”

(சிவ. சூ. 10, வெ. 64)