பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இத்திருப்பாடலில் தான் ஒருவனுமே பலவாகி நின்றவா என்ற தொடர் இறைவன் உலகுயிர்களாகிய பொருள் தோறும் யாண்டும் நீக்கமறக் கலந்து உடனாய் விளங்கும் இயல்பினைக் கூறுவதாகும். இறைவன் தன்னையன்றி வேறொருபொருளும் இல்லாதிருக்க, அவன் ஒருவனே உலகுயிர்களாகிய பல பொருள்களுமாய்க் காணப்படு கின்றான்’ என இத்தொடர்க்குப் பொருள் கொள்வாருமுளர். இப்பொருள் இத்திருவாசகத்தை அருளிச் செய்த திருவாதவூரடிகள் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாததாகும்.

ஒருபொருளே பல பொருள்களாகத் தோற்ற மளித்தலும் ஒருபொருளே பல பொருள்களிலும் ஊடுருவிக் கலந்து நிற்றலும் தம்முள்மாறுபட்ட இருவேறு தன்மை களாகும். இவ்விரண்டினுள் இத்திருப்பாடலில் மணிவாசகப் பெருமான் குறித்தது, ஒருபொருளே தம்முள் வேறுபட்ட பல பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பினையே யாகும். இந்நுட்பம் எண்வகையாய் நின்றான் என்னாது, 'எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்’ எனத் தாம் கூறும் பொருள் இனிது விளங்கத் திருவாதவூரடிகள் தெரித்து மொழிதலால் நன்கு உணரப்படும்.

‘புணர்ந்து நிற்றல்' என்றது, ஒருபொருள், தான் அல்லாத மற்றொரு பொருளுடன் கூடி நிற்றலையே குறிக்கும். அங்ஙனம் அன்றி ஒரு பொருளே பலபொருள்க ளாய் விரிந்து தோன்றுதலையோ ஒன்று மற்றொன்றாகத் திரிந்து தோன்றுதலையோ அச்சொல் குறிப்பதன்றாம். ஒருடம்பினிற் கலந்து நிற்கும் உயிர், அவ்வுடம்பின் ஐம்பொறிகளினும் ஐம்புல உணர்வினைத் தோற்றுவித்தல் பற்றி உடம்போடு ஒன்றாய்க் கலந்திருப்பினும் உண்மையால் நோக்கும் வழி அவ்வுயிர் உடம்பின் வேறாதல் போன்று, முதல்வனாகிய இறைவனும் உலகுயிர்கள் எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நின்று அவற்றை இயக்குதல் பற்றி அவை பலவுமாய் விவி நிற்பினும் உண்மையில் அம்முதல்வன் அவற்றின் வேறாய்த் தான் ஒருவனே யாவன் என்னும் மெய்ம்மையினையே, தான் ஒருவனுமே பலவாகி நின்றவா எனவரும் இத்தொடரில் அடிகள் தெளிவாக விளக்கியுள்ளார்.