பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நீரில் தோன்றி மீளவும் நீரில் ஒடுங்கும் நுரை, அலை, சுழல் முதலியவற்றை நீர்க்கு இடமாகிய கடலிலே தோன்றி யொடுங்குதல் போல எனத் திருவெண்காட்டடிகள் உவமையாக எடுத்தாளுதலால், இயக்குவன நிற்பனவாகிய உலகத்தொகுதிக்கு இறைவல் ஆதாரமாவதன்றி முதற் காரணமாகான் என்பதே திருவெண்காட்டடிகள் கருத்தென்பது இனிது புலனாகும். “நின்னிடைத் தோன்றி நின்னிடை யொடுங்கும்” என்றது, மாயைக்குத் தாரகம் ஆதல் பற்றி யென்றுணர்க. அக்கருத்து உணர்ந்துகோடற்கன்றே நீரிற்றோன்றியொடுங்கும் நுரை முதலியவற்றை நீர்க்கிட மாகிய கடலிற்றோன்றியொடுங்குதல் போல் என்று உவமை கூறினாராகலின், ஆண்டு ஆசங்கைக்கு இடமின்மையுணர்க (சிவஞான டோதப் பேருரை, ஏழாம் சூத்திரம் இரண்டாம் அதிகரணம்) எனச் சிவஞான சுவாமிகள் இத்தொடர்ப் பொருளைத் தெளிவுபடுத்தினமை இங்கு நினைத்தற் குரியதாகும்.

இறைவனது திருவருளாகிய கண்ணின் உதவியைப் பெறுதற்கு முன், இல்லன உளவாய், உள்ளன. கானாது தாம் அறியாமையாகிய இருளிலகப்பட்டு அல்லற்பட்ட தன்மை யையும், திருவருளாகிய ஞானநாட்டம் பெற்ற பின்னர் அசத்தாகிய உலகத்தொகுதி இல்லையாகிமறைய, இறைவனாகிய மெய்ப்பொருள் எங்குமாய் விளங்கித் தோன்றிய தன்மையினையும் திருக்கழுமல மும்மணிக் கோவையின் பத்தாம் பாடலில் திருவெண்காட்டடிகள் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம்.

"இடைமருதினை இடமாகக் கொண்டு எழுந்தருளிய பெருமானே, அடியேன் பிறவிச் சுழலில் அகப்பட்டுத் தடுமாறும்போது யானுற்ற துன்பத்தினையும், என்னை யீன்றெடுக்கும் நிலையில் என்தாயுற்ற துன்பத்தினையும் உள்ளவாறு உணர்வோர் உயிர்க்குயிராகிய நின்னை யன்றியாருளர்? பெருகிய துன்பந்தருவதாகிய இப்பிறவிச் சுழலிற் பட்டு இனிப்பிறக்கும் வலியுடையேனல்லேன், நின்னை உறுதுணையாகப் பற்றிய வழிபடும் ஒருநெறியைத் தவிரப் பிறவிநோய் களைதற்குப் பிறிதொரு வழியும் இல்லை.