பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச் செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் தத்துவக் கொள்கைகளும்

தமிழ் வளர்ச்சியிற் பேரார்வமுடைய பாண்டிய மன்னர்கள் தமிழிற் சிறந்த புலவர் பெருமக்களை ஒருங்கு கூட்டிச் சங்கம் நிறுவிக் கல்விப் பணிபுரிந்த காலம் சங்ககாலம் என வழங்கப்பெறும். கடல்கொண்ட தென் மதுரையிலும் கபாடபுரத்திலும் இப்பொழுதுள்ள கூடல் மாநகரமாகிய மதுரையிலும் அடுத்தடுத்துப் பாண்டியர் களால் நிறுவப்பெற்ற மூன்று சங்கங்களும் முறையே தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வழங்கப்பெறும். இவற்றுள் மூன்றாவதாகிய கடைச்சங்கம் இன்றைக்கு ஆயிரத்தெண்ணுறு ஆண்டுகட்கு முன்னே நிலவியதாகும். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த செந்தமிழ்ப் புலமைச் சான்றோர்களாற் பாடப்பெற்ற செழும் பாடல்களுள் அடிவரவு பற்றியும் திணைவகை பற்றியும் தேர்ந்து தொகுக்கப்பெற்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பனுவல்களே சங்க இலக்கியங்களாகும். தம்முள் ஒத்த அன்பினராகிய ஆடவரும் மகளிரும் நல்லுழின் தூண்டுதலால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலேயே உள்ளங்கலந்த பெருங்கேண்மையின ராய் உலகத்தாரறியத் திருமணம் புரிந்து வாழும் அகத்தினை யொழுகலாறாகிய குடும்ப வாழ்வு பற்றியும், இவ்வாறு பல்லாயிரங் குடும்பங்கள் தம்முட் பகையின்றி அன்பும் அறமும் வளர ஒத்து வாழ்தற்கு அரனாக அமைந்த அரசியல், குடியியல் அமைப்புக்களாகிய புறத்தினையொழுகலாறு பற்றியும் விரித்து விளக்கும் வாழ்வியல் இலக்கியங்களாக இவை திகழ்கின்றன.

மனனுணர்வுடையராய மக்கட்குலத்தார்க்கே