பக்கம்:சொன்னார்கள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101


குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக இந்திய அரசு செய்து வரும் விளம்பரம் “இப்பொழுது வேண்டாம், இரண்டானால் எப்பொழுதும் வேண்டாம் ” எனக் கூறுகிறதல்லவா? இந்த விளம்பரம் சரியல்ல. ஏனெனில் நம் நாட்டில் பலருக்கு ஒன்றுக்கு மேல் அதிக மனைவிகள் உண்டு. ஆகவே இந்த விளம்பரம் “இப்பொழுது வேண்டாம், எந்த மனைவிக்கும் இரண்டுக்கு மேல் வேண்டாம்” என இருப்பதே மிகப் பொருத்தமாகும்.

—எம். சி. டாபர்

(அ. இ. கா. க. உறுப்பினர்)


இந்தியாவில் தற்காலம் எல்லாரையும் துன்புறுத்தும் பாபம் ஒன்று உள்ளதென்றால் அது அடிமைத்தனமேயாகும். ஒவ்வொருவனும் தலைவனாக இருக்க விரும்புகிறானே ஒழிய, கீழ்ப்படிந்து வேலை செய்ய ஒரு மனிதன்கூட விரும்பக்காணோம்.

—சுவாமி விவேகாநந்தர்


நம் நாட்டில் பெரும்பாலும் படிப்பற்றவர்களே வியாபாரம் செய்கின்றனர். மேல் நாடுகளில் நன்கு படித்தபின்னரே வியாபாரத்தில் இறங்குகின்றனர். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் 12-வயது வரையிலாவது படித்த பிறகே தொழிலில் இறங்க வேண்டும். புத்தி கூர்மையுள்ள இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டும்.

—எ. நாயனர், பி. ஏ. பி. எல். (8 - 7 - 1949)

(அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சாலியர் மகாஜன சங்க 2வது மாநாட்டில்)


குழந்தைகள் வாழக் குடும்பம் வாழும். இளமை நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றியெல்லாம் எழுதாமல், வாழ்க்கையில் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் குழந்தை நூல்கள் எழுத வேண்டும்.

—அன்பு கணபதி (5 - 12 - 1960)