பக்கம்:சொன்னார்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102


உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்!

—டாக்டர் மு. வரதராசனார் (1962)


குடும்ப வருமானம் போதவில்லையானால், பெண்களும் அறவழியில் பொருளீட்டிக் குடும்ப நிலையைச் சீர்படுத்த முயலுவது இழுக்கல்ல. உத்தியோகத்திற்கு ஏற்ற கல்வி பெறாத பெண்கள் வீட்டில் ஓய்வு நேரங்களில் நூல் நூற்றல்’ தையல் வேலை செய்தல் போன்ற தூய தொழில்களைச் செய்து பொருள் தேடலாம்.

—திருமதி மரகதவல்லி சிவபூஷணம் B.A., B.T., (26-12-1953)

(சைவை மங்கையர் மாநாட்டு தலைமையுரையில்)

நமது தேசத்தில்-பொய்யான காரியங்களில் நம்பிக்கைக் கொண்டு மயங்கி ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றனர். அவசியமான காரியங்களுக்கு எவ்வளவோ பணம் தேவையிருக்கப் பொய்யானவற்றிற்குப் பெரும் பணம் செலவு செய்யப்படுவதை எண்ணும் பொழுது வருத்தம் உண்டாகிறது. இப்பணம் நம் நாட்டிலுள்ள எல்லா சாதியாருக்கும் பயன்படுகிற தென்றாலும் பாதக மில்லை. குறிப்பிட்ட வகுப்பாருக்கே இப்பணம் செல்லுகின்றது. இதுவரையில் லாபமடைந்து வந்தவர்கட்கு என் பேரில் வருத்தமுண்டாகலாம். நீங்கள் நீதியை உணர்ந்து அதன்படி செய்யுங்கள். வெகு காலமாக திதி கொடுத்தல் என்னும் வழக்கத்தை நம்மவர்கள் கையாண்டு வருகின்றனர். இவ்வாறு செய்ய வேண்டுமென்று நம்தமிழ் நாற்களில் காணப்படவில்லை.

—வ. உ. சி. (3 - 3 - 1928)

(காரைக்குடியில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/104&oldid=1016053" இலிருந்து மீள்விக்கப்பட்டது