பக்கம்:சொன்னார்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109


வெற்றி என்னைத் தேடிவரவில்லை; நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.

—ஜார்ஜ் பெர்னார்ட்ஷா

சாதாரணமாக நம் வீட்டுக்குச் சும்மா வந்து போகிறவர்களுக்கும் கூட காபி தேயிலை கொடுத்து உபசரிப்பதே இக்காலத்துக்குரிய வழக்கமாய் விட்டது. தேனீர்ப்பான விருந்துகள் (டீ பார்ட்டிகள்) மூலைக்கு மூலை நாள்தோறும் நடைபெறும் காலமாயிருக்கிறது. அரசப் பிரதிநிதி பதவியிலிருந்து கரிசன் காலம் முதற்கொண்டு இந்தியாவில் தேயிலை விருத்தியாகிக் கொண்டே வருகிறது. அவர்தம் தூண்டுதலும், முயற்சியும் சேர்ந்து வீடுதோறும் தேனீர்க் குடிப்பது அதிகமாகிவிட்டது. நோயாளிகளுக்கும், கூடக் காப்பியையும், தேனீரையும் நல்ல தாது விருத்திக்குரிய ஆகாரம் என்று எண்ணிக் கொண்டு, குடிக்கும்படியான காலமும் வந்துவிட்டது. ஆனாலும், காப்பி, தேனிர், கொக்கோ முதலிய பானங்கள் எல்லாம் உடல் நலத்தைக் கெடுப்பவை என்று தீர்மானமாய்ச் சொல்லுவேன்.

— காந்தி (1927)


நிரந்தரமாய் அமைக்கப் பெற்றிருக்கும் சேனையின் அபாரமான செலவினால் இந்தியா உண்மையில் தரித்திர தசையை அடைந்திருக்கிறது. விரைவிலோ, நாட்கழித்தோ இப்பெரிய செலவு தேசத்தையோ அரசாங்கத்தையோ அழித்துவிடும். இப்பொழுது வாலண்டியர்களைச் சேர்த்து யுத்தப் பயிற்சி கொடுத்தால், தாங்க முடியாத இராணுவச் செலவைக் குறைப்பதுடன், தேச பாதுகாப்பில் தற்போதைய பலத்தைவிட அதிகமாகவும் செய்யக்கூடும்.

—ராஜா ராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)