பக்கம்:சொன்னார்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117


ஒருவன் இறக்கும்போது கூறுவது எல்லாம் உண்மையாகவே இருக்கும். அதனால்தான் மரணவாக்கு மூலம் என்று வாங்குகிறார்கள்.

—பெரியார் (13-7-1961)

புதியவர்களுக்குப் பாடல் எழுதும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தவேண்டும். பாட்டெழுதும் திறமை நம் நாட்டுப்பெண்களில் பலருக்கு இருப்பதால், அவர்களையும் இத்துறையில் ஈடுபடச் செய்ய வேண்டும். குறிப்பாக, மதுரை தியாகராயா கல்லூரி, மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சென்னைத் தமிழ் மாணவர் மன்றம் போன்ற இடங்களில் இருந்து, திரைப்பாடல் எழுதுவதற்குத் தமிழ் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாடலுக்கும், நம் நாட்டுக்கும் புதிய சக்தியை ஊட்டவேண்டும்.

—கவிஞர் சுரதா (10-3-1958)


நாடகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிற்சி கொடுக்கும் வகையில் கல்லூரிப் பாடத்திட்டம் அமையவேண்டும். அனைத்துலகிலும் தமிழ் நாடகத்திற்கு ஈடில்லை என்று தமிழன் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை வருவதற்கான வழி வகைகளை அரசும் கலைஞர்களும் இணைந்து காண வேண்டும். இதுவே எனது ஆவல்.

— -தி. க. சண்முகம் (18-4-1972)

(நாடகக் கலைஞர்)


என்னைக் காந்தி என்று நான் உங்களில் யாரையும் அழைக்கச் சொல்லவில்லை! என்னை அறிஞனாக உங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லவுமில்லை! அன்பு மிகுதியால் தம்பிமார்கள் அவரவர் இஷ்டம் போல் என்னை அழைக்கின்ற அன்பு மொழியாகவே இவற்றை எல்லாம் நான் கருதுகிறேன்.

—அறிஞர் அண்ணா (1967)

(திருச்சி பொதுக்கூட்டத்தில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/119&oldid=1016081" இலிருந்து மீள்விக்கப்பட்டது