பக்கம்:சொன்னார்கள்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124


அந்தக் காலத்தில் நான் படித்த புத்தகங்களுள் என்னுடைய நடத்தையையும் பிற்கால வாழ்க்கையையும் ஒழுங்கு படுத்தியது பிர்டெளசி என்பவர் எழுதிய ஷானாமாவைத் தவிர, ஸொரோஸ்ட்ரியர்களுடைய கடமைகள் என்னும் குஜராத்தி புத்தகமுமேயாகும். மனம், வாக்கு, செய்கை ஆகிய இவைகள் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே நான் அவைகளிலிருந்து அறிந்து கொண்ட கற்பனைகளாகும். ஆனால் நான் அதிகமாய்ப் படித்து மகிழ்ச்சியடைந்தது ஆங்கில நூல்களே. வாட் என்பவர் எழுதியுள்ள ‘மன வளர்ச்சி’ என்னும் நூலைப் படித்ததில், எப்படி எழுதவேண்டும், எழுதுவதில் நடை எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கிற்று. அதாவது, ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் தேவையில்லாமல் பல சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, தெளிவாக எழுதுவது ஆகிய இவைகளே.

—தாதாபாய் நெளரோஜி (1904)

(காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)

கடவுளைக் காரணமாக வைத்து இராசகோபாலன் என்று பெற்றாேர் எனக்குப் பெயரிட்டனர். நானோ, பாரதிதாசன் என்னும் கனக சுப்பு ரத்தினத்தைக் காரணமாக வைத்து சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டேன். இந்த நீண்ட பெயரை என் நண்பர்கள் யாரும் சுருக்கவில்லை. நானே சுரதா என்று சுருக்கிவைத்துக் கொண்டேன்.

—கவிஞர் சுரதா (10-3-1958)


கடவுளின் படைப்பில், முட்டை ஒன்றுதான் கலப்படம் செய்ய முடியாத ஒரு உணவு. அதற்கு அத்தகைய மூடி ஒன்று அமைந்திருக்கிறது,

— கிருஷ்ணப்பா (11-1-1958)

(யூனியன் உதவி உணவு அமைச்சர்)