பக்கம்:சொன்னார்கள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126


நான் சிறு பையனாய் இருந்தபொழுது சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் குடிப்பது வழக்கம். ஒரு நாள் வீட்டில் சாராயம் இல்லை. எதிரிலிருந்த கடையில் போய்க் குடித்து வரும்படி என்னை அனுப்பினார்கள். எனக்கு அப்பொழுது அங்கே போனதில் ஏற்பட்ட அவமானத்தையும் வெட்கத்தையும், ஒரு பொழுதும் மறக்க முடியாது. அது போதும் போதுமென்று ஆய்விட்டது. பிற்பாடு சாராயக் கடையில் நான் கால் வைத்ததே கிடையாது.

—தாதாபாய் நெளரோஜி (1904)

(காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்)


நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், வாரத்திற்கு இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி வந்தேன். எனக்கு இஷ்டம் இருக்கிறதோ இல்லையோ சும்மா இருக்கமாட்டார்கள் என் அம்மா. என் தலையில் எண்ணெயைக் கொட்டிவிடுவார்கள்.அதனால் அப்போதெல்லாம் சரியாகவே தலைமுழுகி வந்தேன். ஆனால் பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்ட பிறகு, அப்படி முடியவில்லை.

—அறிஞர் அண்ணா (19-2-1966)


உயர்சாதிக்காரர்களே உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் நீங்கள் மாறவில்லையானல், எல்லா தாழ்த்தப்பட்டவர்களும் புத்த மதத்தில் சேரவேண்டிய நிலை ஏற்படும். என்னப் பொறுத்த வரையில் நான் புத்தமதத்தில் சேர வேண்டிய உரிய நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

—பசவலிங்கப்பா (1973)


எழுத்தாளர் உலகில் நான் யாரையும் விரோதித்துக் கொள்வதில்லை. என்னை யாராவது விரோதி என்று எண்ணிக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நான் என்ன செய்வது?

—கல்கி