பக்கம்:சொன்னார்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பெண்கள் படித்தால் கள்ளப் புருஷனுக்குக் கடிதம் எழுதி விடுவாள் என்று சொல்லப்படுகிறது. கள்ளப் புருஷனின் கபடத்தனத்தைக் கண்டிக்க வேண்டியது ஆண்களாகிய உங்களது வேலையேயாகும். பெண்கள் ஒரு சொத்து என்றும், அவர்கள் இரண்டொரு உதவிக்குத்தான் ஆகக்கூடியவர்கள் என்று ஆண்கள் நினைத்தால், அவர்களின் கெட்ட எண்ணத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

— திருமதி லீலாவதி ராமசுப்பிரமணியம்
(6-7-1931-ல் விருதுநகர் க்ஷத்திரிய பெண்பாடசாலை ஆண்டு விழாவில்)

பாம்பன் சுவாமிகளை நான் என் 18-வயது முதல் அறிவேன். என்னைச் சுவாமிகளிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், ஆசிரியர் நா. கதிரைவேற்பிள்ளையும், புதுப்பாக்கம் சம்பந்த முதலியாருமாவார்கள். சுவாமிகளிடம் நான் எனக்கிருந்த பல சாத்திர ஐயங்களைக் களைந்து கொண்டேன். நான் அரசியலில் தலைப்படுமுன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஓய்வுப் பொழுதைச் சுவாமிகளிடம் அறிவுரையாடுவதிலேயும், எனக்குள்ள சாத்திர ஐயங்களைக் களைந்து கொள்வதிலேயுமே பெரிதும் கழித்து வந்தேன்.

—திரு. வி. க. (30 - 5 - 1929)

நான் எழுதிய எழுத்தில் பாதியைக்கூட உங்களால் அழிக்க முடியாது. ஏன், உங்கள் கண்ணீரெல்லாம் கொட்டிக் கழுவினாலும் ஒரு வார்த்தையைக்கூட அழிக்க முடியாது.

—உமர்கய்யாம் (பாரசீகக் கவிஞர்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/18&oldid=1057128" இலிருந்து மீள்விக்கப்பட்டது