பக்கம்:சொன்னார்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17



எனது தீதற்ற வாழ்வே நான் கூறும் தகுந்த எதிர்வாதமாகும். யான் யாது சொல்வதென்பதைப் பற்றிச் சற்று நினைத்தால், அசரீரி என்னைத் தடை செய்கின்றது. இதனால், நான் இறந்துபடுவது கடவுளுக்குச் சம்மதந்தானென்பது வெளியாகின்றது. இதுகாறும் குணத்திலும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து, நண்பர் பலராலும் போற்றப்பட்டுத் திருப்தியுடனே காலத்தைக் கழித்து வந்தேன். எனது ஆயுள் இன்னும் பெருகுமாயின், யான் மூப்படைந்து, பார்வை குன்றி, காது கேளாது, அறிவு கெட்டுப்போய், எனது வாழ்க்கையையே வெறுத்துரைக்க நேரிடும். எதிரிகள் வேண்டுகிறபடி மரண தண்டனையை எனக்கு விதித்தார்களே யாயின், அதனால் எனக்கு அவமானமொன்றும் ஏற்படாது.

— சாக்ரட்டீஸ்

இறைச்சி உண்பவர்கள் ஒருவரையொருவர் கூடக் கொன்று தின்று விடுவார்கள். அதனால் ஏற்படும் துன்பம் இல்லாதிருக்குமானால், என் உடலில் கூட சிறு பகுதிகளே இறைச்சி உண்பவர்களுக்காக வெட்டித் தருவேன், அப்பகுதிகள் உடனே வளர்ந்து விடக்கூடுமானல், எல்லா மக்களுக்கும் போதுமான உணவு கிடைக்கக் கூடுமானால், மக்கள் இறைச்சி உண்பதையே தடைசெய்து விடுவேன்.

—அக்பர்

தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும், அவர்கள் சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தத் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால், தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பெண்களுக்கு இவ்வார்த்தைப் பிடிக்காதுதான்.

—பெரியார் (1930)

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/19&oldid=1013131" இலிருந்து மீள்விக்கப்பட்டது