பக்கம்:சொன்னார்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளேயே சுயமரியாதையாகும். அக்குழந்தைத் தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

—திரு. வி. க.

நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். கல்லூரி போனவன் என்றோ, எனக்குப் பூகோளம் தெரியும் என்றோ, நான் எப்போதும் சொன்னதில்லை. ஆனாலும் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ் நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் பெரும் பாலும் அறிவேன். அவற்றிற்குப் போகிற வழி, இடையில் வரும் ஆறுகள், முக்கிய ஏரிகள், அவற்றின் உபயோகம் பற்றி எனக்குத் தெரியும். மற்றும் எந்தெந்த ஊரில் எப்படி எப்படி ஜனங்களுக்கு ஜீவனம் நடக்கிறது, எந்தத் தொழில் பிரதானமாக இருக்கிறது என்பதையும் நேரில் பார்த்திருக்கிறேன். வட இந்தியாவிலும் பல இடங்களைப் பார்த்துத் தெரிந்து வைத்திருக்கிறேன். இதெல்லாம் பூகோளம் இல்லை, கோடுகள் இழுத்துப் படம் போட்ட புத்தகந்தான் பூகோளம் என்றால், அது எனக்குத் தெரியாததாகவே இருக்கட்டும்.

—காமராசர்
(1959-ல் சென்னைப் புளியந்தோப்பு குட்டித் தம்பிரான் தெரு பொதுக் கூட்டத்தில்)


பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான்.

—ம.பொ.சி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/27&oldid=1013134" இலிருந்து மீள்விக்கப்பட்டது