பக்கம்:சொன்னார்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34


இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஆண்களே எதிர்க்கிறார்கள். அதனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், பழங்காலந் தொட்டு திருமணங்களில் வாழ்த்துகிறவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெறும்படி வாழ்த்தி வருகிறார்கள். அந்தப் பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் செல்வம் தான் பெரிய செல்வம் என்ற எண்ணம் இன்னமும் நீடித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம்.

—பிரதமர் இந்திரா காந்தி

எதுவும் பேச்சு வாக்கில் 'கி' என்ற அடைமொழியைப் பெற்று வரும். எப்படி? பணம், கிணம், சங்கம், கிங்கம், சினிமா, கினிமா, நாடகம், கீடகம், கட்சி, கிட்சி, வீடு, கீடு, சோறு, கீறு, காப்பி, கீப்பி, என்று வரும். அதனால்தான் நந்தனாரை கிந்தனர் என்று பெயர் வைத்தேன். ஆனால் என் பெயரை மட்டும் நீங்க அப்படிச் சொல்லலாம் என்றால் ஏமாந்து போயிடுவீங்க. ஆமாம், ஆமாம், சொல்லிப் பிட்டேன். கிருஷ்ணன் - கிருஷ்ணன்தான். -

—கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்

நான் உண்மையில் யாரையாவது பிரதிபலிக்கின்றேனா என்று வியப்பதுண்டு. பலர் என்னிடத்தில் அன்பு செலுத்துகிறார்களென்றாலும், நான் யாரையும் பிரதிபலிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். நான் கீழ் நாடும் மேனாடும் சேர்ந்த ஒரு விந்தையான கலப்புப் பேர்வழி. நான் எந்த இடத்துக்கும் சேராதவன். ஒருவேளை என்னுடைய எண்ணங்களும், போக்கும் கீழ்நாட்டைவிட மேனாட்டுக்குப் பொருந்தியவையாக இருக்கலாம். ஆனால் கணக்கற்ற வழிகளில், இந்தியா தன் எல்லா மக்களையும் பற்றிக்கொள்வது போன்று என்னையும் பற்றிக் கொள்கின்றது.

—நேரு