பக்கம்:சொன்னார்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன். ஒருவர் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன். அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர். இன்னொருவர் அறிஞர் அண்ணா. இவர் என்னுடைய அரசியல் தலைவர்: இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார்.

எம். ஜி. ஆர். (22-11-1964)


கம்பன் அரங்கைக் கட்டிய வி.ஜி.பி. நிறுவனம், கம்பன் புகழ் பாடியே வாழ்ந்த ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியாருக்கு இந்த அரங்கில் சிலை வைக்க வேண்டும்.

—கவிஞர் மீ. ப. சோமசுந்தரம் (1-1-1977)

(வி.ஜி.பி. நிறுவனத்தாரின் கோல்டன் பீச்சில், கம்பன் அரங்கத் திறப்பு விழாவில்)


நமக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு நாவும் இருப்பதற்குக் காரணம், கேள்வி அதிகமாகவும், பேச்சு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

—டயோஜனீஸ்


இது நாள் வரை நான் மதுவை அருந்தியதே இல்லை ஆனல் என்னைப் பொருத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால்தான் எதுவுமே கெடுதலே தவிர அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை.

—பெரியார் (16-9-1973)


என் உடல் அமைப்பைப் பார்த்தாலே புரியும், நான் அதிக உயரம் எட்ட முடியாதவன்; அதனால்தான் எனக்குத் துணையாக அதிக உயரம் உள்ள நாவலர் நெடுஞ்செழியனையும், மற்றவர்களையும் வைத்திருக்கிறேன்: அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் இருக்கும் குறைகளை நிறைவு செய்யும் அறிவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள்.

—அறிஞர் அண்ணா (7-3.1967)