பக்கம்:சொன்னார்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


தமிழ் நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழிசை வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், தமிழ்ப் பாட்டுக்கும், தெலுங்குப் பாட்டுக்கும் சம அந்தஸ்து அளிக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து. தமிழ்ப்பாட்டுக்களைத் தவிர தெலுங்குப் பாட்டுக்களை பாடக் கூடாதென்று ஒருவர் என்னைச் சொன்னால், நான் அந்தக் கச்சேரிக்குப் போகச் சம்மதிக்க மாட்டேன்.

—சங்கீத வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (22-11-1941)


பள்ளிக்கூடத்தில் என்னால் படிக்க முடியவில்லை. தெரிந்த காரணம் ஏதுமின்றியே நான் எப்பொழுதும் வகுப்பில் கடைசியாகவே இருந்தேன். ஆசிரியர்கள் ஒரு போதும் என்னிடம் இரக்கம் காட்டியதில்லை. என் தகப்பனாரும் என்னை முட்டாள் என்றே நினைத்தார் என உணர்ந்தேன்.

—தாமஸ் ஆல்வா எடிசன்


சேதுபதி மன்னர் என்னிடம் வைத்துள்ள அன்பு விஷயமாய் எனக்குள்ள நன்றியறிதலை இவ்வளவென்று எடுத்துச் சொல்ல என்னல் முடியவில்லை. என்னாலும் என் மூலமாயும் ஏதாவது நற்காரியம் நடந்திருந்தால், அதில் ஒவ்வொரு அணுவுக்கும் பாரத நாடானது அம்மன்னருக்கே கடன் பட்டிருக்கின்றது. ஏனெனில், நான் சிகாகோவுக்குப் போக வேண்டுமென்கிற எண்ணம் அவருக்கே முதலில் உண்டாயிற்று. பிறகு அக்கருத்தை என் தலையிலேற்றி அதைச் செய்து முடிக்கும்படி ஓயாமல் என்னை வற்புறுத்தியதும் அவரே. அவரே இப்பொழுதும் என் பக்கத்திலே நின்று, முன்னிருந்த மகிழ்ச்சி சிறிதும் குறையாதவராய் முன் நடந்ததைவிடப் பெரிய பெரிய காரியங்களெல்லாம் இனி நடக்க வேண்டுமென்று இன்னும் ஆசை கொண்டிருக்கிறார்.

—சுவாமி விவேகானந்தர்

(பாம்பனில் நடைபெற்ற கூட்டத்தில்)