பக்கம்:சொன்னார்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58


சாதிசமய வேறுபாடுகளைக் கருதாது மெய்யன்பு பாராட்டிச் சார்ந்து ஒழுகுதலே சமரசமாம். அத்தகைய சமரசம் கைவர ஒழுகுதலே சன்மார்க்கமாகும், இந்நிலையை மெய்ந்நிலையாகக் கொண்டு ஒழுகுவோமாயின் நாம் நம் வள்ளற்பெருமானை உள்ளன்போடு வழிபட்டவராவோம், வணங்கினராவோம்.

—பேராசிரியர் கா.நமச்சிவாயமுதலியார் (23-1-1926)

(வடலூர் சமரச சன்மார்க்க மாநாட்டில்)


நான் என் கண்களால் பார்த்தது போல் பார்த்திருந்தாலன்றி வேறு வழியாக இந்தியாவின் வறுமையைப் பற்றித் தெரியவராது. ஜனங்களின் மரணத்திற்கு பிளேக் ஒரு முக்கிய காரணம். இந்த வியாதியாலுண்டாகும் மரணத் தொகை மிக்கப் பரிதாபகரமானது. 1901-ம் வருடத்தில் 2 லட்சமும், 1902-ம் வருடத்தில் 8 லட்சமும், 1904-ம் வருடத்தில் 10லட்சமுமாக வருடாவருடம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மடிகின்றனர். பிளேக் வியாதியால் மாள்வதை இன்னும் தடுத்தபாடில்லை. பட்டினி கிடந்தே மக்கள் தங்கள் தேக வலிமையைக் ஒடுக்கிக் கொண்டனர். பட்டினி கிடப்பதைத் தடுக்காத வரையில் பிளேக் வியாதி தலையெடுத்து ஆடிக்கொண்டிருக்கும். இந்தியாவில் உண்டாகும் பஞ்சம் மழையில்லாமையினாலல்ல. ஐனப் பெருக்கத்தினாலும் அல்ல. மக்களின் பரிதாபகரமான வறுமையும் ஏழ்மையுமே காரணமாகும்.

— டாக்டர் சந்தர்லாந்து


கவிதைகளையும், மற்றும் சிறந்த இலக்கியங்களையும் மனப்பாடம் செய்யும் பழக்கத்தை நல்ல முறையில். மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வரலாம். முந்திய காலத்தில் இந்தப் பழக்கம் இருந்து வந்தது. இப்போது மறைந்து வருகிறது. எனவே, அதனை மறுபடியும் கொண்டு வந்தால் ஞாபக சக்திக்கும் ஆக்கம் ஏற்படும்.

—நெ.து. சுந்தரவடிவேலு