பக்கம்:சொன்னார்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


குடிப்பதற்குக் குழாய்த் தண்ணீர், குளிப்பதற்குக் கிணற்றுத் தண்ணீர், துணி துவைப்பதற்குக் குளத்துத் தண்ணீர்-இப்படிச் சிலர் உபயோகிப்பார்கள். ஆனால், காவிரி நீர், குளிக்க, குடிக்க, துணி துவைக்க, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்குமே பயன்படும். காவிரி நீர் மாதிரி நமது எழுத்தும் இருக்க வேண்டும். அதாவது எளிமையாக, தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருக்கவேண்டும். நம் தமிழைப் புரிந்து கொள்ள யாரும் சிரமப் படக்கூடாது. கருத்தைப் புரிந்து கொள்வது அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்தது.

—ராஜாஜி

மெய்யன்பர்களே! சரித்திரத்தோடு தத்துவங்களையும் உற்றுணர்தல் வேண்டும். தோன்றிய பொறிகள் ஆகாயம் எங்கணும் பரந்தன. ’சுடும்’ எனத் தேவர் அஞ்சிச் சிவனை அடைந்து அரற்றினர். ’நன்று’ என்று சிவபிரான் கூறி, அச்சித் (அறிவு மயமான) பரஞ்சோதியை ’வா’ என்றார். வந்து அடக்கமாக நின்றது. அடக்கமுள்ள பிள்ளைகளைத் தந்தைமார் அழைத்தால் உடனே அவரைச் சார்ந்து, ’ஏன் அழைத்தீர்கள்’ என்று கேட்பது உயர்ந்தது என்று சிலர் கருதுகின்றனர். என் கருத்து சென்று நிற்றல் வேண்டும் என்பதே.

—ஞானியாரடிகள்

அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி, மேடைகளில் முழங்குவார். நானும்கூட தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. 'பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.

நடிகை கே. பி. சுந்தராம்பாள் (13-8 - 1972)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/74&oldid=1014703" இலிருந்து மீள்விக்கப்பட்டது