பக்கம்:சொன்னார்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74


ஒரு சிறு கதை சொல்லுகிறேன். இராமன் என்றொருவனிருந்தான். அவனுக்கு ஆற்றருகில் அரை காணி நிலம் இருந்தது. பயிரிட்டான். நான்கு அங்குல அளவிற்குப் பயிர் வளர்ந்திருந்தது. மழை இல்லை. இந்திரன் மகிழ்ந்தான். அளவில்லா மழை பெய்தது. பெருவெள்ளம் வந்தது. ஆற்றில் வெள்ளம் நிறைந்தது. இராமன் நிலத்திலும் நீர் பாய்ந்தது. வெள்ளம் மேலும் மிகுந்தது. பயிர் முழுவதும் மூடப்பட்டது. வெள்ளம் வடிந்தது. நிலமிருந்த இடமே தெரியவில்லை. ஏன்? மணல் மூடிவிட்டது. ஆற்றிலிருந்த நீர் நேரே பாய்ந்ததால் உண்டாகிய கெடுதி இது. அங்ஙணமின்றி, வெள்ளத்தை அனைகோலித் தடுத்துப் பெருவாய்க்காலிற் செலுத்திப் பின்னர்ச் சிறு வாய்க் கால், கன்னி வாய்க்கால், மடை இவற்றின் வழிச் செலுத்தியிருந்தால் பயிரும் கெட்டிராது, நிலமுடையானுக்கு இழப்பும் நேர்ந்திராது, அன்பர்கள் இதனைக் கவனிக்க.

—ஞானியாரடிகள்

(கந்தர் சட்டிச் சொற்பொழிவில்)


நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை.

—பாரதிதாசன்


என்னைப் புகழாதே. இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது. ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை, புகழின் புறமாகவும், இகழின் புறமாகவும், இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள்.

—விவேகானந்தர்


நபியை நினைப்பவன் எப்படி முகம்மதியனாகிறானோ, ஏசுவை நினைப்பவன் எப்படி கிறிஸ்துவனகிறானோ, அதுபோல வள்ளுவனை நினைப்பவன்தான் தமிழன்.

—அன்பழகன்(4-7-1960)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/76&oldid=1014705" இலிருந்து மீள்விக்கப்பட்டது