பக்கம்:சொன்னார்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86


பல பெரியோர்களால் பன்முறையும் நந்தனார் கல்லூரி விஷயமாகக் கேள்வியுற்றிருக்கிறேன். பல நாட்களாக இக்கல்லூரியைப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் இருந்தும் வந்தது. இப்பொழுது இங்கு வரவேண்டுமென சுவாமி சகஜானந்தர் அன்போடு கேட்டுக் கொண்டமையால் வர நேரிட்டது. நந்தனார் வகுப்பினராகிய இச்சமூகம் முன்னேற்றம் பெற வேண்டுமானால் அறிவோடும், அமைதியோடும் சமாதான வகையில் முயற்சிக்க வேண்டும். ஈண்டு அவ்வாறு நடைபெற்று வருகிறதெனத் தெரிந்து சந்தோஷமடைகிறேன். ஒரு வகுப்பினர் முன்னேற்றத்திற்கு எனைய வகுப்பினர் முயற்சிகள் செய்வதிலும், அந்த வகுப்பில் தோன்றியவர்களே முயற்சித்தால் விரைவில் பெரிதும் பயன்படும் என்பது எனது துணிபு. சுவாமி சகஜானந்தரைப் போல் பலர் தோன்ற வேண்டும். தற்போது இக்கல்லூரி ஓலைக்கட்டிடமாக இருக்கிறது. யான் இங்கு வந்தது மிகவும் ஆச்சரியமெனக் கூறினர். பெரு மாளிகையாயினும், சிறு குடிலாயினும் அன்பிருந்தாலொழியச் சிறப்புறாது. இங்கு அன்பு கமழ்வதால் பெரு மாளிகையினும் சிறப்பாகக் கருதுகிறேன்.

—இராமநாதபுரம் மகாராஜா ராஜா ராஜேஸ்வர சேதுபதி

(4-4-1927)

(சிதம்பரத்தில்)


அறிவு துணை செய்யும் காலம் இது. தமிழர் தமிழிலேயே கொள்ள வேண்டுமென்ற பற்றுடன் விளங்குகின்றனர். பற்றுடையார் போன்று நடிக்கும் சிலர் போலி நடிப்பை நான் அறவே வெறுக்கின்றேன். தமிழ் புத்தகங்களை நன்றாகப் படிக்க வேண்டும், அவற்றில் பழகல் வேண்டும். அவ்வறிவைப் பெறுதல் வேண்டும். இல்லையேல் தமிழரென்று வெளிக்குக் கூறிக் கொள்வோருக்கு வெட்கமில்லை யென்றே நான் கூறுவேன்.

— ஞானியாரடிகள்

(கந்தர் சஷ்டிச் சொற்பொழிவில்)