பக்கம்:சொன்னார்கள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


ஓணமும் தீபாவளியும் எனக்குப் பிடித்த பண்டிகைகள். அதற்கு அடுத்தபடி பொங்கல் நானே விமரிசையாகக் கொண்டாடுகிறேன். அதில், வேடிக்கை—உல்லாச அம்சங்கள் இல்லாததால், ஒரு தெய்வீகப் பண்டிகையாகக் கொண்டாடுகிறேன்.

—K. R. விஜயா


என்னுடைய பாட்டி, ஒரு மூட்டை நெல்லைக் குத்தி அரிசியாக்கிவிடுவார்கள். அவர்களுக்கு அவ்வளவு பலம் இருந்தது. ஆனால் இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் நோஞ்சான்களாக இருக்கிறார்கள். பின்னல் வேலைகள் செய்யும் அளவுக்குத்தான் அவர்கள் உடலில் பலம் இருக்கிறது. பெண்கள் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கடுமையாக உழைக்கவேண்டும். வீணாக அரட்டையடித்து நேரத்தை வீணக்கக்கூடாது. பக்தி புத்தகங்களைப் படிப்பதில் நேரத்தைச் செலவிட வேண்டும்.

—முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் (29-12-1964

(சீர்காழியில் நடைபெற்ற மாதர் சன்மார்க்க சங்க மாநாட்டில்.)


மடங்கள் தம்முடைய நிலைமாறி வழக்குகளிலும் வியவகாரங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. அவைகளிலே அதிகமான பணத்தைச் செலவிடுகிறார்கள். அவை வக்கீல்களின் பணப்பெட்டிகளாக இருக்கின்றன. நான் ஒரு மடத்து வக்கீலாக இருந்து கொண்டு மடத்து வக்கீல்களைக் குறை கூறுவது சரியில்லை யென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். மடங்களின் பழக்கம் ஏற்பட்டதனால் உண்மைகளை உணர்ந்து குறைகளை நீக்கிக் கொள்ளவேண்டும் என்றெண்ணியேதான் இதைச் சொல்கிறேன். மடங்கள் அறிவை விருத்தி செய்யும் விஷயங்களிலே பணத்தைச் செலவிடுவதுதான் நியாயம்.

—மதுரை மணி ஐயர் (1883-க்கு முன்)

(கும்பகோணத்திலுள்ள போர்ட்டர் டவுன் ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில்)