பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

சொன்னால் நம்பமாட்டீர்கள்


செய்வதில் ம.பொ.சியும் நானும் ஒன்றாக இணைந்தோம். அப்போது அவருடன் இணைந்த நான், அவருடன் பல ஆண்டுகள் ஒன்றாகவே சேவை செய்தேன்.

இன்று திருத்தணி தமிழ் நாட்டோடு இருக்கிறது. அது தமிழகத்தின் வடக்கெல்லை. கன்யாகுமரி தமிழகத்தில் இருக்கிறது. அது தெற்கெல்லை. சென்னை தமிழகத்தின் தலை நகராக இருக்கிறது. தமிழ்மொழி தமிழ் நாட்டில் ஆட்சி மொழியாக இருக்கிறது.

இத்தனையும் திரு ம.பொ.சியின் உழைப்பால் வந்தது. அவருக்கு உறுதுணையாக நின்று உழைத்த பல தொண்டர்களில் நான் கொஞ்சம் நெருங்கிய தொண்டன் என்பதில் எனக்கு என்றைக்கும் பெருமை உண்டு.

அன்று திரு ம.பொ.சி."வேங்கடத்தை விட மாட்டோம்” என்று முழங்கியிரா விட்டால் இன்று திருத்தணி ஆந்திர மாநிலத்தில் இருந்திருக்கும்.

அதே போல் “குமரியை கொள்ளை கொடோம்’ என்று கர்ஜனை செய்திரா விட்டால் இன்று கன்யாகுமரி கேரளத்தில் இருந்திருக்கும்.

“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்ற ம.பொ.சியின் தமிழ் முழக்கம் ஏற்பட்டிராவிட்டால் இன்று சென்னை இரண்டாகக் கூறு போடப்பட்டு ஆந்திராவிற்குப் பாதி, தமிழகத்திற்குப் பாதி என்றல்லவா இருந்திருக்கும்?

தமிழை ஆட்சி மொழியாக்க ம.பொ.சி.பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனை சிறந்த சேவையில் நானும் சம்பந்தப் பட்டிருந்தேன் என்று நினைக்கும்போது தமிழ் இனத்திற்கு என் கடமையைச் செய்த பெருமிதம் எனக்கு ஏற்படுகிறது.