பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

103



அதன் பின்னர் தமிழ் ஹரிஜன் பத்திரிகையைத் துவக்கினேன். சிறந்த தேசபக்தரும்-அறிஞருமான திரு பொ. திருகூட சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார்கள். காந்திஜி அமரராகும் வரை அந்தப் பத்திரிகையை விடாமல் நடத்தினேன். மகாத்மாஜி என்னை சென்னையில் சந்தித்த மறுவாரம் ஹரிஜன் பத்திரிகையில் என்னைப்பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பு எழுதினார்.

“ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை ஸ்ரீ ராஜாஜி சென்னை இந்தி பிரசாரசபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன் பின் ஸ்ரீ சின்ன அண்ணாமலையைப் பற்றி ஸ்ரீ சத்யநாராயணா மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர் என்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானைச் சிறையை உடைத்து, மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரிய மடைந்தேன்.

அந்தப் போராட்டத்தில் பல பேர் உயிர் இழந்தனரென்றும் ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன். ஸ்ரீ ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்யமாட்டார். ஸ்ரீ சின்ன அண்ணாமலையைச் சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்பப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை.

எனவே ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்த ஸ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.-எம்.கே.காந்தி