பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காமராசரின் ஆசி

நாட்டுக்கு நமது சின்ன அண்ணாமலை செய்திருக்கும் சேவை மகத்தானது. அவருடைய பேச்சைக் கேட்டுப் பல இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது எனக்குத் தெரியும். சின்ன அண்ணாமலையின் தலைக்கு விலை வைத்தது ஆங்கில அரசாங்கம். ஒரு மாதம் வெள்ளைக்கார அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் சின்ன அண்ணாமலை.

இவரைக் கைது செய்ய முடியாமல் இவரது பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் சொல்லொணாக் கொடுமைகள் செய்தது ஆங்கில ஏகாதிபத்யம். போலீசாரின் துப்பாக்கி முன் அஞ்சாது மார்பைக் காட்டி நின்று வந்தேமாதரம் என்று முழங்கியவர் சின்ன அண்ணாமலை.

ஆங்கில அரசாங்கம் 1942 ஆகஸ்டில் இவரைக் கைது செய்து திருவாடானை சிறையில் அடைத்தது. 24 மணிநேரத்தில் மக்கள் ஒன்று திரண்டு அச்சிறையைப் பட்டப் பகலில் உடைத்து இவரை விடுதலை செய்துவிட்டார்கள்.

இப்படி மக்களே சிறையை உடைத்து விடுதலை செய்தது உலக சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அப்படி சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய சிறந்த தியாகி சின்ன அண்ணாமலை. இன்றும் இவரது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடத்தில் தழும்பு இருப்பதைக் காணலாம்.