பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இவர் நான்குமுறை சிறை சென்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறைவாசம் செய்திருக்கிறார். தனிப்பட்ட நபர் சத்யாக்கிரகத்தின்போது மகாத்மா காந்தி அவர்களால் சத்யாக்கிரகியாகத் தேர்ந்தெடுக்கப்பெற்று தேவகோட்டையில் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்தார். இவரை அங்கு கைது செய்யாததால் அங்கிருந்து சென்னை வரை நடந்தே வந்து வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து கொண்டு வந்தார். சென்னையில் கைது செய்யப்பட்டார். நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னும் இவர் போராட்ட மனப்பான்மையை விடவில்லை.

தமிழ்நாடு தனி மாநிலமாக அமையவும், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்றும், திருப்பதி, கன்னியாகுமரி தமிழ் நாட்டோடு சேர தலைநகராகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஆந்திராவுக்குப் பங்கு பிரித்துக் கொடுக்கக் கூடாதென்றும் நடந்த போராட்டத்தில் முக்கிய பங்கேற்று, அதற்காகவும் சிறை சென்றார். இப்படி வாழ்க்கையில் பெரும்பகுதி போராட்டம், சிறை என்றே கழித்துவிட்டார். இவ்வளவு தியாகம் செய்தும் கட்சியிலோ அரசாங்கத்திலோ எந்தப் பதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

இவருடைய தியாகத்தையும், பட்டம் பதவியில் ஆசையில்லாத இவருடையமனப் பக்குவத்தையும் ஒவ்வொரு காங்கிரஸ் ஊழியரும் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

திரு. சின்ன அண்ணாமலை எழுதிய “தியாகச் சுடர்”
என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பெருந்தலைவர்
காமராஜ் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி.