பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

சொன்னால் நம்பமாட்டீர்கள்


வாங்கிக் கொண்டு போய் புதிய இந்தியா தேசப் படம் ஒன்றை வாங்கி வந்து பள்ளிக்கூடத்துச் சுவரில் மாட்டிய பிறகுதான் உபாத்தியாயர் அவரைப் பெஞ்சுமேலேயிருந்து கீழே இறக்கினாராம்.

அதற்குப் பிறகு வெகுகாலம் வரையில் தேசம் என்றாலே கல்கி வெறுப்புக் கொண்டிருந்தாராம். அப்புறம் ஒரு நாள் தற்செயலாக “தேசத்திற்காக உழைக்க ஜென்மம் எடுத்தோம்” என்ற பாட்டை அவர் கேட்க நேர்ந்ததாம். உடனே ஜன்ம தேசத்திற்கு உழைக்க வேண்டுமென்ற ஆசை அவர் பிடரியைப் பிடித்து உந்தியதாம்.

மேல் சட்டை, மேல் வேஷ்டி எல்லாவற்றையும் கழற்றித் தலையைச் சுற்றி எறிந்து விட்டு, காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினாராம்.

மாகத்மாஜி ! நான் தேசத்திற்கு உழைக்கத் துணிந்து விட்டேன். அவ்விடம் நான் வரட்டுமா? அல்லது தேசத்தை இங்கே அனுப்பிவைக்கிறீர்களா? என்று கேட்டாராம்.

மகாத்மாஜி, கேட்டதற்குப் பதில் சொல்லாமல், கைராட்டையில் தினம் இரண்டாயிரம் கெஜம் நூல் நூற்றுவா! உன் மனது தெளிவடையும் என்று பதில் கடிதம் எழுதினாராம்.

ரொம்ப லட்சணம்: நான் தேசத்துக்கு உழைக்க வந்தேனா? நூல் நூற்க வந்தேனா? என்று கல்கி தமக்குத்தாமே கேட்டுக் கொண்டு மகாத்மாஜியை விட்டுவிட்டாராம்.

பின்னர், திடீரென்று தம் உடையை மாற்றினாராம். ஒரு கதர் ஜிப்பாவும், அதன்மேல் கம்பளி வெயிஸ்ட் கோட்டும் அணிந்து தலையில் ஒரு காந்திக் குல்லா தரித்துக் கொண்டாராம். உடனே அச்சமயம் காங்கிரஸ் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினாராம்.