பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மந்திரி பதவி

1952-ல் ராஜாஜி இரண்டாவது முறையாகத் தமிழ் நாட்டுக்கு முதல் மந்திரியாகப் பதவியேற்ற நாள். அன்று பலர் வந்து ராஜாஜியைப் பார்த்து “மந்திரிப் பதவி வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

நானும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் ராஜாஜி அருகில் உட்கார்ந்திருந்தோம். டாக்டர் சுப்பராயன் வந்தார்.

அவர் வந்ததும் ராஜாஜி “பாருங்கள் டாக்டர், எல்லோரும் வந்து மந்திரி வேலை வேண்டுமென்று கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

சிலர்தான் மந்திரி வேலையே வேண்டாமென்றிருப்பவர்கள். என் கஷ்டம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.” என்று கூறினார். -

சிறிதுநேரத்தில் சுப்பராயன் எழுந்து போய்விட்டார். அவர் போனதும் ராஜாஜி, ம.பொ.சியிடம் “பார்த்தீர்களா, டாக்டரும் மந்திரி வேலைக்குத்தான் வந்தார், சமாளித்துவிட்டேன்” என்றார்.

“தங்களிடம் அன்புள்ளவர்களை ஏமாற்றலாமா?” என்றார் ம.பொ.சி.

அன்புடையவர்களுக்கு அன்புதான் காட்டலாம். எல்லோருக்கும் மந்திரி பதவி தரமுடியுமா என்றார் ராஜாஜி.