பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சொன்னால் நம்பமாட்டீர்கள்


சாப்பிடக்கூப்பிட்டும் நான் போகவில்லை. வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டு நின்றேன். ‘ஜே’ கோஷம் காதைப் பிளந்தது; எங்கும் பரபரப்பு.

காந்தி மகாத்மா வந்துவிட்டார். காரிலும் ஏறி உட்கார்ந்து விட்டார். எனக்கோ ஒரே பதட்டம். நெருக்கியடித்து காரின் பின்பக்கம் சென்று விட்டேன். காந்திஜியின் முகம் தெரியவில்லை. முதுகு மட்டும் தெரிந்தது. சடக்கென்று காரின் பின்புறமுள்ள ‘காரியரில்’ தாவி ஏறி காந்திஜியின் முதுகைத் தொட்டேன். அவர் திரும்பிப்பார்த்து சிரித்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் நான் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டதுபோல் நினைத்து என்மீது பாய்ந்து என்னைப் பிடித்துத் தூக்கினார்கள். காந்தியடிகள் , அவர்களை அடக்கி விட்டு என்னை தன் அருகில் வரும்படி அழைத்தார். நான் பயந்து கொண்டே அவரிடம் போனேன். அவர் ஒரு மோகனச் சிரிப்புச் சிரித்துவிட்டு என்னிடம் ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்.

பிறகு மாலை போட வந்த கூட்டம் என்னை நெருக்கிப் பின்னுக்குத்தள்ளிவிட்டது. ஊர்வலம் புறப்பட்டுப் போயிற்று நானும் ‘காந்திஜிக்கு ஜே ஜே’ என்று கத்திக்கொண்டு பின்னே சென்றேன்.

ஊர்வலத்தில் போகும்போதே அந்த காந்தி ஆப்பிளை சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டேன். அந்த ஆப்பிள் என் ரத்தத்துடன் கலந்ததோ இல்லையோ ‘காந்தி நாமம்’ என் ரத்தத்துடன் அன்றே கலந்து விட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை நான் காந்தியடிகளைப் பின்பற்றி வருகிறேன். உண்ணும்போதும், உறங்கும்போதும்கூட காந்திஜியின் நினைப்பு என்னை விட்டு அகலுவதில்லை.