பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

179


அவர்கள் சேர்த்துக் கொண்டார். “ராஜாஜியை வேண்டாம்” என்று சொல்பவர்களை ‘கிளிக்’ என்று மகாத்மாஜீ ஹரிஜன் பத்திரிகையில் எழுதினார்.

உடனே காந்திஜியைக் கண்டனம் செய்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பேசினார்கள். சில ஊர்களில் காந்தியடிகளின் படங்கள் கூட எரிக்கப்பட்டன. இப்படியாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லோல கல்லோலப்பட்டது.

கடைசியில் ஒரு வழியாக ராஜாஜி மத்திய அரசில் மந்திரியானார். அத்துடன் அந்தப் பிரச்னை தீர்ந்தது. ஆனால் திரு. காமராஜ் அவர்கள் அதன் பின்னர் ராஜாஜியை ஆதரித்தவர்களை நம்புவதில்லை. காங்கிரஸ் கமிட்டிகளில் எதிலும் வந்துவிடாதபடி பார்த்துக் கொண்டார்.

நான் எப்போதும்போல் காங்கிரஸ் பிரசாரம் செய்து கொண்டிருந்தேன். நாளாக ஆக, தலைவர் காமராஜ் அவர்கள் பழையபடி என்னுடன் சுமூகமாகப் பழக ஆரம்பித்தார்கள்.

ராஜாஜி வங்காள கவர்னராகி-அதன் பின்னர் இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகி மிகுந்த புகழுடன் பதவிவிட்டு சென்னை வந்து தங்கியிருந்தார்.

1952 தேர்தலில் காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும்போது என்னைக் கூடவே கூட்டிக்கொண்டு போனார். ரொம்பவும் அன்பு காட்டினார். நானும், “இனி காமராஜ் நம்பிக்கையைப் பெற்றுவிடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். தேர்தலில் முதலமைச்சர் குமாரசாமி ராஜா தோற்றார். காங்கிரஸ் பெரும்பான்மை இழுபறியாகிவிட்டது. காமராஜ் பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.