பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

185



நம்ம சின்ன அண்ணாமலை பேசினால் போதும், காங்கிரஸ் கொள்கைகளை-சாதனைகளை அவர் நீங்கள் ரசிக்கும்படி பேசும் சக்தி உளளவர். நானும் இருந்து கேட்கிறேன். அவர் பேசிய பிறகு மழை இல்லை என்றால் நான் பேசுவேன்” என்று சொல்லி அமர்ந்தார். அந்த மாதிரி பெருமையை எனக்கு அவர் அளித்தது இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

அன்றும் சிதம்பரத்தில் அப்படிச் செய்து மக்களிடம் அவர் என்னிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கண்ணதாசன் பேசிய பேச்சு சபையை உலுக்கிவிட்டது. அப்போது திரு. கிருஷ்ணசாமி நாயுடு தன்னை மறந்து எழுந்து கவிஞரைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.

திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பரம ரசிகர். அவரும் ஒரு கவிஞர், குழந்தை உள்ளம் கொண்டவர்.

பண்டிதநேருஜி அமரரானதும் நான் நேராக சத்யமூர்த்தி பவனம் சென்றேன். அங்கு திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘கோ’ வென்று கதறி அழுது,

“ஐயோ, நம் தலைவர் போய்விட்டாரே, போய்விட்டாரே” என்று தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டார். அவ்வளவு உண்மையான ‘பக்தி’ கொண்டவர் நாயுடு அவர்கள்.

தேர்தல் தோல்வியைச் சரிப்படுத்த நானும் கண்ணதாசனும் சுற்றுப் பயணம் வந்தபோது ஸ்ரீவில்லிபுத்துருக்குச் சென்றோம். தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நின்று திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் தோல்வி அடைந்திருந்தார்.

ஆகவே அவரைப் பார்ப்பதற்காக மாலை 4 மணி அளவில் அவர் இல்லம் சென்றோம். எப்பொழுதும் தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர் திருநாயுடு அவர்கள்.