பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

சொன்னால் நம்பமாட்டீர்கள்



திரு. பி.ஆர்.பந்துலு அவர்கள் முதன் முதலில் டைரக்ட் செய்த படமும் அதுதான்!

“தங்கமலை ரகசியம்” படிப்பிடிப்பின்போதுதான் பந்தலு அவர்களின் உள்ளத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, “கப்பலோட்டிய தமிழன்” ஆகிய இருவரின் சரிதத்தைப் படமாக்க வேண்டுமென்ற விதையை ஊன்றினேன். -

திரு. ம.பொ.சி. அவர்களைப் பற்றி பந்துலு அவர்களுக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பேன்.

என்னுடைய தூண்டுதலுக்கு மிகவும் ஆதரவாக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் இருந்தார்.

பத்மினி பிக்சர்ஸுக்கு பாட்டு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் திரு. கு. மா. பாலசுப்ரமணியமும் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்தவராகையால் அவரும் என் பேச்சை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.

‘தங்கமலை ரகசியம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதுவே “ரத்னகிரி ரகசியம்’ என்ற பெயரில் கன்னடத்தில் வெளிவந்து அதுவும் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இச்சமயத்தில்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும் நானும் மற்றும் தமிழரசுக் கழகத் தோழர்களும் கட்டபொம்மன் பற்றித் தமிழகமெங்கும் தீவிரப் பிரசாரம் செய்து கொண்டிருந்தோம்.

தமிழ் மக்கள் கட்டபொம்மனைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார்கள். அவனுடைய வீரம்-தியாகம் இவைகளை மிகவும் போற்றினார்கள்.