பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

219



‘டெஸ்ட் எடுப்பது’ என்பது பலமாதிரி நடிக்கச் சொல்லிப் படமாக எடுப்பது.

‘டெஸ்டை’ எம்.ஜி.ஆர்.பார்த்தார். கூட நாங்கள் சிலரும் பார்த்தோம்.

சரோஜாதேவி நடந்து போகும் போது ஒரு கால் தாங்கித் தாங்கி நடந்து சென்றதைச் சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு எம்.ஜி.ஆர். அதுவும் ஒரு செக்ஸியாகத் தானே இருக்கிறது. இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள் என்று சொன்னார்.

எங்களது சாவித்திரி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ‘பாக்கெட்மார்’ என்ற இந்திப் படக் கதையை தமிழில் எடுப்பது என்றும் அதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும், திரு. ப. நீலகண்டன் டைரக்ட் செய்வதென்றும், திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் நெகடிவ் ரைட்ஸ் வாங்கிக் கொள்வதென்றும் முடிவு செய்து வேலையைத் துவங்கினோம்.

படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர் “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம். அந்த படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும், அதே போல் நாம் தேர்ந்தெடுக்கு. படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமையவேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.

பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்குப் பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்கவேண்டுமென்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.