பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

சொன்னால் நம்பமாட்டீர்கள்



எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள் கடைசியில் எங்கள் குழுவைச் சேர்ந்த திரு. மா. லெட்சுமணன் அவர்கள் மேற்படி படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தோம்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அப்பெயர் ரொம்பவும் பிடித்தது. திரு. மா. லெட்சுமணனுக்கு ரூ.500ஐ எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

“திருடாதே” படம் வேகமாக வளர்ந்து வந்தது. திரு. எம்.ஜி.ஆர். அவர்களும் “திருடாதே” படத்தை மிக நன்றாகத் தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கால் ஒடிந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். நானும் அடிக்கடிபோய் அவரைப் பார்த்துபேசிவிட்டு வருவேன்.

ஒருநாள் எம்.ஜி.ஆர் என்னிடம், “என் கால் குணமாகி நான் படப் பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியாது. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டி அதிகமாக ஏறிப்போகும்.

ஆகவே படத்தை திரு. ஏ.எல்.எஸ். அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். உங்களுக்கு நான் லாபமாக ஒரு நல்ல தொகை தரச் சொல்கிறேன்” என்று சொன்னார்.

நான் சிறிது யோசித்தேன். அவர் விடவில்லை. “என் பேச்சைக் கேளுங்கள்” என்று விடாப்பிடியாகச் சொன்னார். சரி. என்று ஒப்புக்கொண்டேன். அவர் சொன்னபடியே எல்லாம் செய்து கொண்டோம்.