பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் மனைவி

நான் தேவகோட்டைக்கு சுவீகாரம் போன பின் என்னுடைய பதிமூன்றாவது வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் மனைவிக்கு நான் தாலி கட்டவில்லை! வேறு யார் கட்டமுடியும் என்று பரபரப்படைய வேண்டாம்.

எங்கள் நகரத்தார் சமூகத்தில் முன்பு அப்படி ஒரு வழக்கம் இருந்து வந்தது. மணமகன் தொட்டுக்கொடுத்த தாலியை பங்காளிகளில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரியவர் மணமகனின் பிரதிநிதியாகச் சென்று மணப்பெண்ணுக்கு திருப்பூட்டுவார்.[1] அதன் பின்னர் நடை பெறும் மணவறை நிகழ்ச்சியில்தான் மணமகன் மணமகள் நேரிடை சந்திக்கும் சடங்குகள் நடைபெறும்.

என் திருமணம் ஆறு நாட்கள் நடைபெற்றது. என் மனைவிக்கு அப்போது வயது 12. எங்கள் திருமணத்தில் பல பழக்க வழக்கங்கள் இருந்தாலும் பெண் எடுக்கிக் காட்டுவது என்பது சுவாரஸ்யமான ஒரு வழக்கமாகும்.


  1. திருப்பூட்டுதல் என்றால் தாலி கட்டுதல் என்று பொருள். அக்காலத்தில்-பெண்களுக்கு போதிய பாதுகாப்பு சமூகம்-சட்டம் இவைகளில் கிடையாது. தாலி கட்டியவன் கணவன் என்று இருந்தால் எவனாவது பலாத்காரத் தாலி கட்டிவிட்டாலும் கணவனாகி விடுவான். ஆகவே மாப்பிள்ளையின் பங்காளிகளில் சிறந்த ஒருவரைக் கொண்டு மணமகனுக்காகத் திருப்பூட்டுவது நகரத்தார் வழக்கம்.