பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பார்க்கர் பேனா

1937 அக்டோபர் மாதம் முதல் தேதியன்று தமிழகத்தில் கள்ளுக்கடைகளை மூடும் திருப்பணியை அன்றைய ராஜாஜி துவக்கினார்.

“விட்டது சனியன் விட்டது சனியன்
விட்டது நம்மை விட்டதடா
கொட்டுக முரசு கொம்பெடுத்துது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்தி விட்டோம்”

என்று ஊர் ஊராகத் தெருத் தெருவாக நாமக்கல் கவிஞரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தேன்.

உயர்நிலைப் பள்ளியிலும் ஸ்ட்ரைக் செய்ததால் என்னை “ஸ்கூல் பைனல்” எழுத முடியாமல் டிஸ்மிஸ்செய்து விட்டார்கள். அதனால் முழு நேரமும் அரசியல், அரசியல்தான்.

என் தந்தையார் எனது செயல்களை கவலையோடு கவனித்து வந்தார்கள். கடைசியாக என்னைப் பினாங்குக்குப் போகும்படி பணித்தார்கள். பினாங்கில் (மலேயா) எங்களுக்கு ஒரு வட்டிக்கடையும் கொஞ்சம் ரப்பர் எஸ்டேட்டும் இருந்தது. எங்கள் ஏஜெண்டு ஒருவர் இவைகளைக் கவனித்துத் கொண்டிருந்தார்.

நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறி ஐந்து நாட்கள் பிரயாணம் செய்து பினாங்கு போய்ச்சேர்ந்தேன். ஏற்கனவே ஒரு முறை நான் போய் வந்தவனாகையால் எனக்கு எல்லாம் அத்துபடிதான்!