பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

41



கொஞ்சநாட்கள் எங்கள் கடையில் சிரத்தையுடன் வேலை செய்தேன். வட்டித் தொழிலில் ஈடுபாடு உண்டாகவில்லை. தினமும் பத்திரிகை படிப்பதிலும் அரசியலிலும் தான் நாட்டம் உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாகப் பொது ஸ்தாபனங்களில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். பல இடங்களில் கொற்பொழிவு செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டது. கொஞ்சம் பிரபல்யம் உண்டாயிற்று.

ஒருநாள் என் மாமாவின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்த கள்ளுக்கடை என் கண்னை உறுத்தியது. தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் பெண் மக்கள் பலர் கள்ளுக் கடையை வெறுத்துப் பேசினார்கள்.

ஆண்களும் “கடை இருப்பதினால்தான் குடிக்கிறோம். கடையை மூடிவிட்டால் மறந்து விடுவோம்” என்று கூறினார்கள். கள்ளுக்கடை காண்ட்ராக்டர் கடையை மூட ஒப்புக் கொள்ளவில்லை.

அங்குள்ள தொழிலாளிகள் அனைவரும் தமிழர்களே! கள்ளுக்கடை காண்ட்ராக்டரும் தமிழரே. ஆகவே எனது பிரசாரத்தைத் துவக்கினேன். சுமார் மூன்று மாத காலம் பல எஸ்டேட்டுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தேன். அமோக ஆதரவு கிடைத்தது. பின்னர் மறியல்-அடிதடி-போராட்டம் இவைகள் நடந்தன.

கடைசியில் ஒரு எஸ்டேட்டில் பெண்கள் எல்லாம் கூடி, கள்ளுக்கடைக்கு நெருப்பு வைத்து விட்டனர். உடனே சங்கிலித் தொடர்பாகப் பல கள்ளுக்கடைகள் கொளுத்தப்பட்டன. இதற்குக் காரணம் நான்தான் என்று காண்டராக்டர்கள் அரசாங்கத்திற்குப் புகார்செய்தனர். உடனே என்மீது ‘வாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டது.