பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

43



“பதிமூன்று வயதில்” என்றேன்.

அந்த அம்மையாருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. “பதிமூன்று வயதில் கல்யாணம் செய்து என்ன செய்வது?” என்றாரே பார்க்கலாம்.

நான் உடனே “பிள்ளை பெறுவது” என்றதும் கவர்னரும் அவர் மனைவியும் வெகு நேரம் சிரித்தார்கள். சிரித்துச் சிரித்து அவர்கள் கண்ணில் நீர் வழிந்தது. பிறகு கவர்னர் உன் பையன் பெயர் என்ன? என்றார்.

“இன்னும் பெயர்வைக்கவில்லை. இப்போது அவன் பேபி தானே. நான் ஊருக்குப் போய்தான் அவனுக்குப் பெயர் வைப்பேன்” என்றேன்.

“உன் குழந்தை உன் மாதிரி சிவப்பாக இருப்பானா?” என்று கவர்னர் மனைவி கேட்டார்.

என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது நான் இங்கு வந்து விட்டேன். அதனால் குழந்தையை இன்னும் பார்க்க வில்லை. ஆனால் குழந்தை அழகாக சிவப்பாக இருக்கிறது என்று என் மனைவி கடிதம் எழுதியிருக்கிறாள் என்று கூறினேன்.

“உன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உனக்கில்லையா?” என்று அந்த அம்மையார் கேட்டார். மிகவும் ஆவலாக இருக்கிறது என்றேன்.

“பின்னர் ஏன் இம்மாதிரி எல்லாம் தப்பு செய்கிறாய்?” என்று கவர்னர் கேட்டார்.

“நான் ஒரு தவறும் செய்யவில்லை, என்நாட்டு மக்கள்கள் குடித்துச் சீரழிவதைத் தடுத்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டமென்பதே என் எண்ணம்” என்றேன்.