பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சொன்னால் நம்பமாட்டீர்கள்



“அதற்காகக் கள்ளுக்கடைகளைக் கொளுத்தலாமா?” என்றார். “நான் கொளுத்தவில்லை கொளுத்தச் சொல்லித் தூண்டவுமில்லை. நான் காந்தீயவாதி. பலாத்காரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் மக்கள் கள்ளுக்கடையை கொளுத்தியது அவர்களது வெறுப்புணர்ச்சியைக் காட்டு கிறதல்லவா?” என்றேன்.

இதற்கு என்ன தண்டனை தெரியுமல்லவா என்று அதட்டினார் கவர்னர்.

“தெரியாது, ஆனால் குற்றம் செய்யாதவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியா? என்பதை மேன்மை தங்கிய சீமாட்டியாரிடம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறி அந்த அம்மையாரைப் பார்த்தேன்.

உடனே அந்த அம்மையார் ஏதோ கவர்னரிடம் கூறினார். கவர்னர் புன்முறுவல் செய்து “சரி உனக்கு வயது பதினேழுதான் ஆகிறது. ஆகவே உன்னை விடுதலை செய்கிறேன். ஆனால் நீ இன்னும் ஒரு மாதத்தில் மலேயாவை விட்டு இந்தியாவுக்குப் போய்விடவேண்டும். அப்படி நீ புறப்படவில்லை என்றால் அதிகாரிகள் உன்னை பலவந்தமாகக் கப்பலில் ஏற்றி விடுவார்கள்” என்று தீர்ப்புக்கூறினார்.

“உன் மகனைப் பார்க்க சீக்கிரம் இந்தியா போய்ச்சேர்” என்று கவர்னரின் மனைவி சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் விடைபெற்றுக் கொண்டு வந்தேன். அந்த ஒரு மாதமும் அதிகாரிகள் என்னைக் கண்காணித்தார்கள்.

கவர்னர் உத்தரவை அறிந்த, அங்கிருந்த லேவாதேவிக் கடைக்காரர்கள் அனைவரும் அதிகாரிகளைவிட அதிகக் கண்காணிப்பாக இருந்து என்னைக்கப்பலேற்றி விட்டுத்தான் மறு ஜோலி பார்த்தார்கள்.