பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

45



நான் கப்பலில் நாகப்பட்டினம் வந்து இறங்கிய அன்று. ஹிட்லர் யுத்த பிரகடனம் செய்து குண்டு மாறி பொழிய ஆரம்பித்தான். என் தந்தையார் நான் நாடு கடத்தப்பட்டு வந்தது குறித்து வருத்தப்பட்டாலும், யுத்தகாலத்தில் வெளி நாட்டில் அகப்பட்டுக் கொள்ளாமல் ஊர் வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதற்கடுத்து பத்தாண்டு கழித்து மேற்படி கவர்னர் தம்பதிகளை சென்னை அடையாறு எலியட்ஸ் பீச்சில் சந்தித்தேன். நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர்களுக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. பின்னர் நான் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தியதும் ஒரு அலாதியான அன்பு காட்டினார்கள்.

அந்த அம்மையார் மறக்காமல் என் மகனைப் பற்றி விசாரித்துக் கொண்டார்கள். நான் அவ்விருவரையும் என் இல்லத்திற்குக் கூட்டி வந்து காபி கொடுத்து உபசாரம் செய்தேன் என் மகனையும் காண்பித்தேன்.

இரண்டு மூன்று நாட்கள் அவர்களை மகாபலிபுரம் முதலிய இடங்களுக்குக் கூட்டிபோய் காண்பித்தேன். அவர்கள் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். ஒய்வு பெற்றதும் கொஞ்ச காலம் லண்டனில் இருந்துவிட்டு உலகம் சுற்றி வருகிறார்களாம்.

அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் என்னை விட்டுப் பிரியும்போது அந்த சீமாட்டி எனக்கு ஒரு பார்க்கர் பேனா பரிசளித்தார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் இப்போது நான் இதை எழுதிக் கொண்டிருப்பது அந்தப் பேனாவால்தான்!