பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படிக்கும் போதே விடுதலை உணர்வுக்காக தலைமை ஆசிரியரிடம் மோதி, அதன்பின் அந்த தலைமை ஆசிரியரே தம் பேத்திக்கு ‘கமலா’ என்று பெயர் வைக்க உந்து சக்தியானவர்; 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் திருவாடனை சிறைக் கைதியாகி, அந்தச் சிறையை பொதுமக்கள் உடைத்து இவரை மீட்ட வீரவரலாறும் இவருக்கு உண்டு.

இன்று தேவகோட்டை பகுதியைச்சார்ந்த பலரும் பதிப்புத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அடித்தளமிட்டவர் சின்ன அண்ணாமலைதான். இவரிடம் தொழில் பயின்றவர்கள் இன்றும் வாழ்கின்றனர். ராஜாஜி, ம.பெ.சி. தேசியக்கவி நாமக்கல் கவிஞர் போன்ற தேச பக்தர்களின் நூல்களை எல்லாம் வெளியிட்ட பெருமை சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணைக்கே உண்டு.

தேசபக்தராக, நகைச் சுவையை அள்ளித் தெளிக்கும் மேடைப் பேச்சாளராக, பதிப்பக உரிமையாளராக, திரைப்படத் தயாரிப்பாளராக, நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர்களை ஒன்றிணைத்து வழிநடத்துபவராக, எழுத்தாளாராக, ராஜராணி கதைகளிலிருந்து சமூகக் கதையின் பக்கம் எம்.ஜி.ஆரை திருப்பிய திசைகாட்டியாக வாழ்ந்து முடிந்தவர் சின்ன அண்ணாமலை.

காலம் செல்லச் செல்ல சிலர் காணாமல் போவர்; சிலர் காலம் செல்ல செல்ல கவனிக்கப்படுவர். இரண்டாவது வகையைச் சார்ந்தவர் சின்ன அண்ணாமலை என்பதற்கு இந்த நூல் மிகச் சிறந்த சான்று. தமிழ் மக்கள் இந்த நூலை பெரிதும் வரவேற்பர்; வரவேற்க வேண்டும்.

எஸ். வைரவன்
குமரன் பதிப்பகம்