பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருவாடானைச் சிறை

1942 ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அன்று இரவு 12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம் என்னை சூழ்ந்துகொண்டு இருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும் கைது செய்தால் பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில் நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ் பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல் என்னை வெளியில் வைத்திருப்பது பெருத்த அபாயம் என்று கருதி. போலீஸார் அன்றிரவே கைது செய்வது என்று முடிவு செய்துவிட்டனர்.

இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்கமாட்டார்கள். சில பேர்தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி அன்றிரவு என்னைக் கைது செய்வதற்குச் சுமார் பத்து லாரி ரிஸர்வ் போலீலைக் கொண்டு வந்து நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டிடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக்கொண்டு உள்ளே படபடவென்று குதித்தார்கள்.

அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரிஸர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது. “உங்களைக் கைது செய்திருக்கிறோம்” என்று போலீஸார் சொன்னார்கள்.