பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலை மறைவு வாழ்க்கை

1942 ஆகஸ்ட் போராட்டத்தில் திருவாடானை சிறையில் இருந்து மக்கள் என்னை விடுதலை செய்தததும், போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதும் அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் என் கையில் ஒரு குண்டு பாய்ந்ததும், போலீஸ்காரரிடம் இருந்து தப்புவதற்காகப் பல பகுதிகளில் ஒளிந்து மறைந்துகையில் ஏற்பட்ட காயத்துடன் திருச்சிக்கு வந்து சேர்ந்தேன்

திருச்சியில் திரு டி.எஸ். அருணாசலம் அவர்கள், இப்போது காமராஜ் மன்றம் என்ற பெயரால் இயங்கி வரும் நூல்நிலையக் கட்டிடம் அப்பொழுது ஜில்லா போர்டு ஆபீஸாக இருந்து வந்தது.

அதில் அவர் தங்கி இருந்தார். நடு இரவில் மேற்படி கட்டிடத்திற்குச் சென்று அவரை எழுப்பினேன். அவர் என்னைப் பார்த்து திடுக்கிட்டு எப்படி இங்கு வந்தாய்? என்று கேட்டார். நடந்த சம்பவங்களைச் சொல்லிக் கையில் இருந்த காயத்தைக் காண்பித்தேன்.

உடனே என்னை அவர் டாக்டர் ஜகந்நாதன் என்பவரிடம் கூட்டிச் சென்றார். திருச்சி நகரசபை சேர்மனாக இருந்த டாக்டர் ரங்கநாதன் அவர்களுடைய மாமனார்தான் டாக்டர் ஜகந்நாதன். டாக்டர் ஜகந்நாதன் அவர்கள் சிறந்த காங்கிரஸ் அபிமானி, ஆகையால் கையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டை போலீஸுக்கு அறிவிக்காமல் வெளியில் எடுத்து காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டிவிட்டார்.