பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுயராஜ்யம் வாங்கியாச்சா?

நான் காசியில் தலைமறைவாக இருக்கும்போது தேவகோட்டையில் என் இல்லத்தில் என் பெரிய தந்தையார் புதல்வர் பழ. லெட்சுமணனுக்குத் திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்குக் கண்டிப்பாக நான் வருவேன் என்று போலீஸார் நினைத்து திருமணத்தன்று ஏராளமான போலீஸாருடன் இன்ஸ்பெக்டர் வீரசாமி ஐயர், திருமண வீட்டிற்குள் துழைத்தார்.

ஏராளமான பிரமுகர்களும், சொந்தக்காரர்களும் நிறைந்திருந்த திருமணப்பந்தல் போலீஸைக் கண்டதும் குழம்பி விட்டது. போலீஸார் எல்லோரையும் விரட்டி அடித்ததோடு, சமையல் செய்து கொண்டு இருந்த பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்து சாப்பாட்டைநாசம் செய்து, பல இடங்களிலும் என்னைத் தேடி இருக்கிறார்கள். அப்போது என் பெரிய தந்தையார், எனது தந்தையார் அனைவரும் போலீஸாரால் அடிக்கப்பட்டனர்.

அச்சமயம் என் தாயார் அங்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்களைப் பார்த்து, “ஐயா, நீங்கள் தேடி வந்த பையன் என் மகன்தான். அவனுக்காக மற்றவர்களை அடிக்காதீர்கள். என்னை அடியுங்கள்; நான்தான் அவன்தாய்” என்று உருக்கமாகச் சொல்ல; உடனே இன்ஸ்பெக்டர் இன்னும் பத்து நாட்களில் அவனைக்கொண்டு வந்து போலீஸில் ஒப்படைக்காவிட்டால் உங்கள் அனைவரையும் லாக்கப்பில் தள்ளி இந்த வீட்டையும் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.