பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சொன்னால் நம்பமாட்டீர்கள்



நம் கண்முன்னேயே தம்பியைப் போட்டு அடிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அதனால் மில் துணியை அணிவதுதான் இந்த நேரத்திற்குச் சரியாக இருக்கும்” என்று சொன்னார்.

நான் சொன்னேன். தயவு செய்து மன்னித்து விடுங்கள் இன்று நான் அடிவாங்குவதற்குப் பயந்து கதரை மாற்றி மில் துணியை அணிந்தால், என் பேச்சைக் கேட்டு ஆயிரக்கணக்கான பேர் கதர் கட்டி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ்காரர்களிடம் அடிபட்டார்களே, அவர்கள் அனைவரும் என்னைத் ‘துரோகி’ என்று சொல்லமாட்டார்களா? இன்றைக்கு நான் தப்பிக்கலாம்.

நாளை என் பிள்ளைகள் தெருவில் போகும்போது இதோ போகிறார்களே அவர்கள்தான் அந்தத் துரோகியின் பிள்ளைகள் என்று பெயர் வராதா? அந்தக் களங்கத்தை என் சந்ததியாருக்கு ஏற்படுத்திக் கொடுக்க நான் விரும்பவில்லை.

அடிபட்டாலும் உதைபட்டாலும் சாக நேரிட்டாலும் கதர் துணியுடன்தான் சாவேன். நான் இறந்த பிறகு கதர் கொடியையே எனது சடலத்திற்குப் போர்த்த உபயோகப்படுத்த வேண்டும், என்பதே என் விருப்பம் என்று நான் சொன்னேன்.

என் தந்தையார், “அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாம். அவன் ஒரு உயர்ந்த லட்சியத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுவிட்டான். உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்கட்டும்.” என்று கூறியதும் எனக்கு மெய்சிலிர்த்தது. மிகப் பயந்த குணம் உடைய என் தந்தையாருடைய உள்ளத்தில் அப்படியொரு உறுதியான உணர்ச்சி ஏற்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது.