பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

79



என்னால் சிரமப்பட்ட உறவினர்களிடம் என்னை மன்னிக்கும்படி நான் கேட்டுக் கொண்டபோது அவர்கள் அனைவரும் தங்கள் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லாம் விதிப்படி நடக்கிறது. அதற்கு நீ என்ன செய்ய முடியும் என்று தத்துவம் பேசி என்னைச் சமாதானப்படுத்தினார்கள்.

மறுநாள் நான் வாங்கப் போகும் அடி உதை இவைகளைப் பற்றியே என் உறவினர்கள் அனைவரும் கவலைப்பட்டதாகத் தெரிந்தது. நான் சிறிதும் கவலைப்படவில்லை. என் கண் முன்னேயே என்னைக் காப்பாற்றப் பலபேர் துப்பாக்கி குண்டுபட்டு இறந்து, என் மீது சாய்ந்து தங்கள் இரத்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தது போல் என் உடம்பெல்லாம் இரத்தத்தைத் தெளித்து அமரநிலை அடைந்த காட்சி என் மனக்கண் முன்நின்றுகொண்டே இருந்தது.

இவ்வளவு மாபெரும் தியாகத்திற்கு முன்னால் ஏதோ சில அடி உதைகள் என் உடம்பில் படுவது ஒரு சாதாரண தூசிக்குச் சமம் என்ற உறுதியான எண்ண அலைகள் என் உள்ளத்தில் மோதிக்கொண்டு இருந்தன.

மறு நாள் காலை ஊர் பிரமுகர்கள் 5 பேர் வந்து என்னைத் தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இருப்பதைப் பார்த்து மேற்படி ஐவரும் மேல் துண்டை (அங்கவஸ்திரம்) எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு பய பக்தியுடன் இன்ஸ்பெக்டருக்கு முன்னால் போய் நின்றார்கள். இன்ஸ்பெக்டர் வீராசாமி ஐயர் என்ன விஷயம் என்று அதிகாரத் தோரணையில் கேட்டார்.

பையனைக் கொண்டு வந்திருக்கிறோம். என்று பிரமுகர்கள் பவ்யமாகச் சொன்னார்கள்.