பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

85



காவலாளி கதவைத் திறந்தான். போலீஸ்காரர் நாகலிங்கம் முன்னால் வந்து என்தோள்மீது கையை வைத்தார். சரி தீர்ந்தோம் என்று நான் நினைத்தபோது மேற்படி நாகலிங்கம், “தம்பி தர்மபிரபு சோமசுந்தரம் செட்டியார் தங்கை மகன் என்று தெரியாமல் உன்னைத் திட்டிவிட்டேன்.

அதற்காக என்னை மன்னித்துவிடு. ஏனென்றால் உன் தாய் மாமனிடம் பல ஆண்டுகள் நாங்கள் குடும்பத்தோடு வாங்கிச் சாப்பிட்டவர்கள்.

அந்த குடும்பத்தைச் சார்ந்த யாருக்கும் நாங்கள் தீங்கு நினைக்கக் கூடாது” என்று நாகலிங்கம் நா தழுதழுக்கச் சொன்னார்.

எனக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. அடி வாங்கத் தயாராயிருந்த எனக்கு இப்படி ஒரு பெருமையா? என் கண்கள் கலங்கின. என் தாய் மாமன் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைத் தருமம் செய்வது வீண் என்று பேசியவன் நான். அவர்களிடம் நான் சண்டைபோட்டிருக்கிறேன்.

ஆனால் தருமம் தலைகாக்கும் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். அதன் பிறகு அந்த தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சில நாட்கள் என்னை வைத்திருந்தார்கள்.

அந்த சில நாட்களும் நாகலிங்கமும் போலீஸ் காவலர்களும், எனக்கு வேண்டிய செளகரியங்கள் செய்து கொடுத்து ராஜபோகமாக வைத்திருந்தார்கள் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.