பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சொன்னால் நம்பமாட்டீர்கள்


அடைத்துவிட்டார்கள். அதன் பின்னர் வெளியில் நடைபெற்ற தீ வைத்தல், கலவரம் இவைகளுக்கெல்லாம் சிறைக்குள் இருப்பவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?

ஒரு கைதியைச் சிறைச்சாலையில் வைத்துப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் எதற்கும் லாயக்கில்லாத அரசாங்கம் ஆகும். சிறையைவிட்டுத்தப்பாவிட்டால் தீயில் வெந்து சாவதா? ஆகவே 144ஐ மீறியதற்கு மட்டுமே தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு அதிகபட்சம் தண்டனை என்ன உண்டோ, அதற்கு மேல் தண்டனை அனுபவித்தாயிற்று. ஆகவே விடுதலை தான் செய்யவேண்டும்.”

இதுதான் ராஜாஜி கொடுத்த குறிப்பு. இதன்படிதான் வக்கீல்கள் விவாதம் செய்தார்கள். நான் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். விடுதலையாகி வெளியில் வந்ததும் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருப்பதாகச் செய்தி வந்தது.

போலீஸ் வண்டியும் என் வீட்டு வாசலில் வந்து நின்றது. மீண்டும் நான் கைது செய்யப்பட்டேன். கையில் விலங்கு பூட்டப்பட்டது. என்னை திருப்பத்துர் (இராமநாதபுரம் மாவட்டம்) சப்-ஜெயிலுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு திரு. சா. கணேசன் அவர்கள் கைதியாக சிறையிலிருந்தார். அவருடன் சேர்ந்துகொண்டேன். திருப்பத்தூர் சப்-ஜெயில் ஒரு நரகம் என்றால் மிகையாகாது. சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்தோம்.

காந்தியடிகள் உண்ணாவிரதம் நின்றதும் என்னை விடுதலை செய்தார்கள். மீண்டும் வீட்டிற்கு வந்தேன். சிறிதும் நிம்மதி இல்லை. அடிக்கடி போலீஸார் வருவதும் விசாரிப்பதும் இரவில் கதவைத் தட்டி நான் வீட்டில் இருக்கிறேனா என்று சோதிப்பதும் பெரிய தொல்லையாகப் போய்விட்டது.