பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சொன்னால் நம்பமாட்டீர்கள்


தமிழிசை மாநாட்டிற்குச் செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா? ‘சரிவருகிறேன்’ என்று கூறினேன். உடனே எனக்கு முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப்பட்டது. ‘நல்ல வேளை’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

கும்பகோணத்தில் பெரிய வரவேற்பு நடைபெற்றது. தமிழிசை மாநாட்டிற்கு டாக்டர் சுப்பராயன் அவர்கள் தலைமை வகித்தார்கள். ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைத்தார்கள்.

டாக்டர் கப்பராயன் அவர்கள் பேசும்போது ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்; அதற்காகக் காக்கை குயிலாகி விடாது. அதுபோல தமிழ் நமக்குச் சிறந்ததாகாது’ என்று பேசிவிட்டார்.

நான் பேசும்போது டாக்டர் சுப்பராயன் அவர்களை மிகவும் தாக்கிப் பேசி, மேலே சொன்ன கருத்தை அவர் வாபஸ் வாங்க வேண்டுமென்று அங்கேயே ஒரு போராட்டத்தை ஆரம்பித்தேன். மக்கள் என் பக்கம் திரண்டதைப் பார்த்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் தமிழை இழித்துரைத்ததற்கு வருத்தம் தெரிவித்த பின்னர் மக்கள் என் பேச்சுக்குப் பெருத்த ஆரவாரம் செய்து பாராட்டு தெரிவித்தனர்.

ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அவர்கள் நான் சென்னைக்கு வரவேண்டும் என்றும் தன்னுடன் ஒரு மாத காலமாவது தங்க வேண்டுமென்றும் சொன்னார்கள். பழம் நழுவி பாலில் விழுந்ததுடன் அதுவும் நழுவி வாயில் விழுந்தால் எப்படி? அப்படித்தான் என் நிலையுமிருந்தது. ‘சரி’ என்று சொல்லி ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடன் சென்னை வந்து சேர்ந்தேன்.