பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திரு ம. பொ. சி

சென்னையில் நான் தமிழ்ப்பண்ணை நூல் நிலையம் ஆரம்பித்த சில மாதங்கள் கழித்து ஒரு நாள்-மதிக்கத்தக்க ஒருவர்-மெலிந்த உடல்-சிவந்த முகம்-கூரிய கண்கள் அடர்த்தியான மீசை - கதராடை அணிந்து வறுமைச் சாயல் வீச பண்ணைக்குள் நுழைந்தார்.

வந்தவர் திரு. ம. பொ. சிவஞானம் என்பதை அறிந்து அன்புடன் வரவேற்றேன். அவர் அப்போதுதான் சிறையிலிருந்து பரோலில் விடுதலை ஆகி வந்திருந்தார். 1942 புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஆங்கில அரசாங்கம் மத்திய மாகாணத்திலுள்ள அமரோட்டி சிறையில் நம் தலைவர்களுடன் வைத்திருந்தது. அந்த சீதோஷ்ண நிலை திரு. ம.பொ.சி. அவர்களை மிகவும் பாதித்துக் கொடிய வயிற்று வலியை ஏற்படுத்தி விட்டது.

அவரது நோய் முற்றியது கண்டு பயந்து அவரை தஞ்சைச் சிறைக்கு மாற்றினார்கள். அச்சிறையில் அவர் அடைந்த துன்பம் பல முறை எமலோகம் எட்டிப் பார்க்க நேர்ந்தது. இனி பிழைக்க மாட்டார் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தீர்மானித்து ம.பொ.சி. அவர்களை விடுதலை செய்தது.

அந்நிலையில்தான் அவர் தமிழ்ப்பண்ணைக்கு என்னைப் பார்க்க வந்தார். நான் ரொம்பப் பெரிய மனிதன் என்பதற்காக என்னைப் பார்க்க வரவில்லை. தமிழ் உணர்ச்சி அவரை அங்கு

சொந-7