பக்கம்:சோனாவின் பயணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இதைக் கேட்டுச் சிரித்தது அம்மா ஒட்டகம். “இல்லை, இல்லை. எங்களால் அப்படிச் செய்ய முடியாது. ஆனாலும், நீ சொன்னதில் உண்மை இருக்கிறது. ஒட்டகங்களாகிய நாங்கள் ஒரே நேரத்தில் நிறைய நிறையத் தண்ணிர் குடிப்போம்.”

“ஏன் ?” என்று கேட்டது காகம்.

“நாங்கள் பெரும்பாலும் பாலைவனத்தில்தான் வசிக்கிறோம். அங்கு தண்ணிர் கிடைப்பது அரிது. ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், தண்ணீரே இல்லாமல் எங்களால் பல நாட்கள் இருக்க முடியும். நாங்கள் எங்களுடைய வயிற்றில் நீரைச் சேமித்து வைக்கத் தனியாக ஒர் அறை உள்ளது. அது தவிர, எப்போது எங்களுக்கு நீர் கிடைக்கவில்லையோ அப்போது எங்கள் உடலே நீரை உற்பத்தி செய்யும். நாங்கள் இதற்குமுன் எப்போது நீர் குடித்தோம் என்று உனக்குத் தெரியுமா?”

“எப்போது?” என்று கேட்டது காகம். அதிசயமான இந்த மிருகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள அதற்கு ஆவல்.

“ஐந்து நாட்களுக்கு முன்பு” என்று பதில் கூறியது அம்மா ஒட்டகம்.

“என்ன ஐந்து நாட்களா!” என்று ஆச்சரியத்துடன் கூவிய காகம், மற்ற மிருகங்களிடம் இதைப் பற்றிச் சொல்வதற்காகப் பறந்து சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/9&oldid=482897" இலிருந்து மீள்விக்கப்பட்டது